Friday, April 11, 2014

விதைக்கவா ? புதைக்கவா ?

காணும் கண்களுக்கும் உச்சரிக்கும் உதடுகளுக்கும் கேட்கும் செவிகளுக்கும், நான் வடிக்கும் முத்துக்கள் எமது முத்தங்களுடன் சமர்ப்பணம் எழுதுவது எமக்கு புதிதல்ல....  இந்தபாழும் உலகிற்க்கு வந்தநான் 12 வது வயதிலேயே எழுத தொடங்கி விட்டேன் வெளியுலகம் தெரியாமல் எமது எண்ணங்கள் எழுத்துக்களாக கருவாகி உருமாறி எமது தலையில் தேங்கி தேங்கி தலை ''கனமாகி விட்டது (தாங்கள் உத்தேசிக்கும் கனம் அல்ல) அந்த வயதிலேயே எமக்கு கிடைத்த காசுகளை தபால் தலைக்குத்தான் செலவு செய்திருக்கிறேன் எத்தனையோ பத்திரிக்கைகளுக்கு நான் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள் சிறுசிறு திருத்தங்கள் செய்யப்பட்டு தலைப்புகளும் பெயர்களும் மாற்றப்பட்டு வெளியானது கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் சிவப்புகண்ணீர் வடித்த காலங்கள் அது எமது முகவரி மறைந்தே வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் மனம் தளராமல் எழுதிக் கொண்டே இருக்கிறேன் இந்த விஞ்ஞான காலத்திலும் கடந்த ஐந்து வருடங்களாக வலைத்தளங்களை உருவாக்கி எவ்வளவோ எழுதியிருக்கிறேன் நான் தோல்விகளை தழுவியே வாழ்ந்து பழக்கப்பட்டவன் வெற்றியை நான் இதுவரையிலும் தொட்டதில்லை காரணம் நான் காணவே இல்லையே பிறகு எப்படி ? தொடமுடியும், ஒருவேளை யாம் எழுதிக்கொண்டே இருப்பதற்க்கு இந்த தோல்விகள்தான் காரணமோ ? என்னவோ ? இருப்பினும் யாம் மனம் தளராது இறுதிவரை எழுதுவோம் ஏனெனில் எம்மால் சுவாசத்தை நிறுத்த முடியாது  
எமது தலையில் இருக்கும் எண்ணங்களை இந்த வலைத்தளத்தில் உங்களின் பார்வைக்காக உங்களின் கருத்துரைகளுக்காக இறக்கட்டுமா ? இல்லை யாம் இறக்கும்வரை எமது தலையில் இருக்கட்டுமா ? a      
Because, I'm near Expiry Date.
என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் போகுமுன் இந்த விண்ணில் விதைத்திட விரும்புகின்றேன் இதுவும்கூட வெற்றியா? தோல்வியா ? யாமறியோம் பராபராமே கீழ்காணும் யாரோ ஒரு நண்பர் எமக்காகவே எழுதியது போலிருக்கும் இந்தவாசகம் அவ்வப்போது என்னுள் ஊடுருவி வெளியேறி செல்வதுண்டு,,,, அப்பொழுதெல்லாம் எமதுமனம் இலகுவாகமாறி இன்னும் எழுதவேண்டுமென எண்ணம் என்னுள் எழுந்து எமது எழுதுகோல் உழுது கொண்டே இருக்கும், நான் முன்மொழிந்ததை வழிமொழிவீர்களா ? இல்லை வழிமறிப்பீர்களா ? என்ற தங்களின் கருத்துக்களுக்காக வழிமேல் விழி வைத்திருக்கும் தேவகோட்டை பாமரன் அபுதாபியிலிருந்து....
VALMEEGI